மன்னார்குடி, டிச.09:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதி, ஆஞ்சநேயர் கோவில் வீதி பகுதியில் இன்று காலை பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. தெருவை சுத்தம் செய்த நகராட்சி ஊழியர்கள், வழக்கம்போல் வேலியோரமாக குப்பைகளைத் தீயிட்டு கொளுத்தியதில் ஏற்பட்ட அலட்சியம் இந்த விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அப்பகுதி மக்கள் பலமுறை ‘‘குப்பைகளை இங்கு கொளுத்தாதீர்கள்’’ என்று எச்சரித்திருந்தாலும், நகராட்சி ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தீவைத்ததாக தெருவாசிகள் தெரிவித்தனர். இன்றும் குப்பைகளை கொளுத்திய பின்னர் தீ முழுமையாக அணையாமல் இருந்தது.
இதையறியாத பூக்கடை நடத்தி வரும் பெருமாள், தனது சுசுகி எர்டிகா காரை வீட்டின் அருகே உள்ள வேலியோரமாக நிறுத்தியிருந்தார். அணையாமல் இருந்த நெருப்பு காரின் டயர் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு பரவி தீப்பற்றியதால், கார் மளமளவென எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் அதனை கவனித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
தகவல் கிடைத்ததும், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அங்கு வந்து சம்பவம் குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தீ விபத்தில் காரின் டயர் மற்றும் பெட்ரோல் டேங்க் பகுதி தீக்கிரையாகி சேதமானது. சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662

No comments:
Post a Comment